கஜா புயல் பாதித்த நாகப்பட்டிணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு நடத்தினார். அப்போது மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
அப்போது, நிவாரண அறிவிப்புகள் மக்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் கூடுதலாக நிவாரணங்களை அறிவிக்க வேண்டும் என்றும் கூறி, இது தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் கொடுத்தார்.
மனுவில், தங்கள் பணிகள் சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். கஜா புயலுக்கு முன்பாக தங்கள் அரசு எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால், பல ஆயிரம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக தங்கள் தலைமையிலான அரசுக்கு, எமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து போர் கால அடிப்படையில் தங்களின் அமைச்சர்களும், அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் ஆற்றி வரும் பணிகள் சிறப்பானது.
இந்நிலையில், புயல் பாதிப்புக்கு பிறகு தாங்கள் அறிவித்துள்ள நிவாரண உதவிகள் போதாது என்ற கருத்து டெல்டா மாவட்டங்களில் எதிரொலிக்கிறது.
அந்த வகையில் மீனவர்களின் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு அவர்களின் வலைகள், மோட்டார்கள் ஆகியவற்றின் இழப்புகளையும் கருத்தில் கொண்டு, தற்போதைய அறிவிப்பிலிருந்து கூடுதலாக இரு மடங்கு தொகையை வழங்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அது போல் 50 சதவீதம் பாதிப்படைந்த கூரை மற்றும் ஒட்டு வீடுகளுக்கு மாற்றாக, புதிய வீடுகளை இலவசமாக கட்டிக் கொடுக்க முன் வரவேண்டும் என்றும், இதர பாதிப்படைந்த வீடுகளுக்கு தலா 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
அது போல், விவசாயிகளின் நலன் கருதி,நெற்பயிறுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25,000, எனவும், தென்னை, மா, பலா மரங்களுக்கு, தலா ஒன்றுக்கு ரூ.10,000 எனவும், கரும்பு, வாழை மற்றும் சவுக்கு தோப்புக்கு ஒரு ஏக்கருக்கு தலா ரூ.75,000 ஆயிரம் எனவும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
அது போல், மாடு ஒன்றுக்கு, ரூ.20,000, ஆடு ஒன்றுக்கு தலா ரூ.3000, கோழி மற்றும் வாத்துகளுக்கு தலா ரூ.300 எனவும், இழப்பீடுகளை வழங்க ஆவணம் செய்யுமாறும், இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்த பட்ச ஆறுதலாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.