
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (09/07/2021) முகாம் அலுவலகத்தில், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்கள் பேராசிரியர் எஸ்தர் டஃப்லோ, பேராசிரியர் ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன், பேராசிரியர் ஜீன் டிரீஸ், டாக்டர் எஸ்.நாராயண், தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எத்தகைய மாற்றத்திற்கும் தயாராக தமிழக அரசு இருக்கிறது. முழுமையான மற்றும் அதிரடியான மாற்றம் மூலமாகத்தான் சாத்தியம் என்பதை நான் அறிவேன். தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே தொழில் முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக மாற்ற வேண்டும். உலகத்திற்கு மனிதவளத்தை தரும் மாநிலமாக தமிழகம் மாற வேண்டும். ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் இல்லை என்பதை உருவாக்க வேண்டும்.
அனைத்து மாநிலங்களும் தமிழகத்தை முன்னுதாரணமாகக் கொண்டு வளருவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். தமிழக அரசு ரூபாய் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான கடனில் இருக்கிறது. வரி வசூலில் இருந்த மாநில உரிமைகளை ஒன்றிய அரசு ஜிஎஸ்டி மூலம் பறித்துவிட்டது. நிதி ஆதாரம் என்பது விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சில துறைகளின் மூலம் மட்டுமே வருகிறது. நமது வளங்களைக் கொண்டு நம்மை வளப்படுத்திக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும்" எனத் தெரிவித்தார்.