அதிமுக முன்னால் அமைச்சர் ஆலங்குடி தொகுதி வடகாடு வெங்கடாசலம் கடந்த 2008 அக்கடோபர் 7 ந் தேதி வடகாட்டில் அவரது வீட்டில் இருந்த போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் உண்மை கொலையாளிகளையும் கொலைக்கு காரணமாக இருந்தவர்களையும் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறது.
இந்த நிலையில் இன்று அவரது 8 வது நினைவு நாள் மற்றும் குருபூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அதே போல ஆலங்குடி தொகுதி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் மற்றும் திமுகவினர், தேமுதிக நி்ர்வாகிகள் வெங்கடாசலம் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தனர்.
தொடர்ந்து தமிழக மக்கள் கட்சி தலைவர் கே. கே. செல்வகுமார், மாநில துணை செயலாளர் அருள் அணிவகுப்பில் சுமார் ஆயிரம் பேரோடு ஊர்வலமாக வந்து நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுமார் 40 கார்களில் ஊர்வலமாக வந்த அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதி, அமமுக மா.செ. க்கள் பரணி கார்த்திகேயன், சண்முகநாதன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து ரெத்தினசபாபதி எம். எல். ஏ . செய்தியாளர்களின் கேள்விக்கு..
கருணாசை சந்தித்ததால் எனக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பவில்லை. அப்படி வந்தால் பதில் சொல்ல தயாராகவே இருக்கிறேன். இதை வைத்து ஏற்கனவே 18 பேரை ஜனநாயக படுகொலை செய்தது போல என்னையும் படுகொலை செய்ய முடியாது. செய்ய விடமாட்டோம்.
சூளூர் எம். எல். ஏ. கனகராஜ் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று பேசிவருகிறாரே அப்படி ஒரு நிலை வந்தால்..?
முதலின் அந்த முயற்சியை எடுத்தவன் நான். ஆனால் இனி அது சாத்தியமில்லை. அந்த சாக்கடையில் கலக்கமாட்டோம். ஒ. பி. எஸ்., ஈ. பி. எஸ் அணி சாக்கடையாக உள்ளது. நாங்களும் அங்கே போய் விழமாட்டோம். இன்றைய தமிழக மக்களின் நம்பிக்கை டிடிவி மேல் தான் உள்ளது. அதனால் அவர் கரம் தான் வலுப்படும்’’ என்றார்.