Skip to main content

சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு இல்லை!- உயர்நீதிமன்றத்தில் ‘டான்ஜெட்கோ’ திட்டவட்டம்!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

EB BILL PAY PEOPLES TANGEDCO CHENNAI HIGH COURT

 

வெளி மாவட்டங்களுக்கு, மின் கட்டண கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ- TANGEDCO) சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சி.ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பலர் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், மின்கட்டணம் செலுத்த, வரும் ஜூலை 31- ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்படாததால்,  மக்களின் பணப்புழக்கம் முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்த நிலையில், மின் கட்டணத்தைச் செலுத்த உத்தரவிட்டால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். எனவே, மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் மின் இணைப்பைத் துண்டிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். 

 

இந்த வழக்கை, நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, காணொளிக் காட்சி மூலம், நேற்று (01/07/2020) மீண்டும் விசாரித்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜேஷ், வெளி மாவட்டங்களிலும் மின் கட்டணத்தைச் செலுத்த, ஜூலை 31- ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், வெளி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்றும், மேலும் 75 சதவீதம் பேர், மின் கட்டணம் செலுத்தியதற்கான அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்