வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 22ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கருதப்பட்ட நிலையில் ஒருநாளுக்கு முன்னதாகவே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலாக மாறும் பட்சத்தில் வடக்கு நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது. அதேபோல் அடுத்த 12 மணி நேரத்தில் அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இது வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இந்திய பகுதியை விட்டு நகர்ந்து செல்லும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலை வரை பரவலாக மழை பொழிந்தது. சைதாப்பேட்டை, தி நகர், கிண்டி, கோடம்பாக்கம், வேளச்சேரி, எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்தது. சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும், திருவள்ளூர், செங்கல்பட்டு, பெரம்பலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.