திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம் எனச்சொல்லி ஒவ்வொரு கிராமத்திலும் திமுக நிர்வாகிகள் சென்று கிராமசபா கூட்டம் நடத்த வேண்டும் என்றார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 09.01.2019 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு, திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்கச்சராப்பட்டு என்ற கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமசபா கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவுமான எ.வ.வேலு.
ஒரு ஊரில் விளக்கு எரியவில்லை என்று சொன்னால், ஒரு ஊர் சுத்தமாக இல்லை என்று சொன்னால், பாதை சரியாக இல்லை என்று சொன்னால், இவைகள் எல்லாம் உள்ளாட்சி மூலமாகத்தான் தீர்த்துக்கொள்ள முடியும். ஊராட்சி தலைவராக இருப்பவர்கள், ஐந்தாயிரம் ஓட்டு கவுன்சிலராக இருப்பவர்கள், மாவட்ட கவுன்சிலர்கள்தான் கிராமப்பகுதியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய அதிகாரம் உள்ளவர்கள். மூன்று ஆண்டுகாலமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால், இன்றைக்கு கிராமப்பகுதிகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை அது உங்களுக்கே தெரியும்.
தமிழ்நாட்டில் கிட்டதட்ட 12,528 ஊராட்சிகள் உள்ளது. நாம் வீட்டு வரி, குழாய் வரி, சொத்து வரி கட்டுகிறோம், நாம் வரிக்கட்டும் பணம் மத்திய அரசாங்கத்திற்கு செல்கிறது. அவர்கள் நமது உள்ளாட்சியில் உள்ள பிரச்சனைகளை சீர் செய்வதற்காக ஆண்டுதோறும் நம் மாநிலத்துக்கு 3,500 கோடி ரூபாய் தருவார்கள். இந்த பணத்தைதான் நம் மாவட்டத்திற்கும், நமது ஒன்றியத்திற்கு பிரித்து கொடுப்பார்கள். இந்த பணத்தை வைத்துக்கொண்டுதான் உள்ளாட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யமுடியும். மத்திய அரசாங்கம் பணம் அனுப்பவேண்டும். ஏன் பணம் அனுப்பவில்லை என்று கேட்டால், உள்ளாட்சி தேர்தல் நடத்தினால்தான் நாங்கள் பணத்தை அனுப்புவோம் எனக் கூறிவிட்டது.
உள்ளாட்சி தேர்தலை நடத்தாது யாருடைய தவறு, இங்கு இருக்கிற எடப்பாடியின் அதிமுக அரசாங்கத்தின் தவறு. தோல்வி பயத்தின் காரணமாக தேர்தலை நடத்த மறுக்கிறார். அவருடைய சுயநலத்திற்காக தேர்தலை நடத்த முன்வரவில்லை. இவர்கள் தேர்தல் நடத்தாததால் மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சிக்கான பணம் 3 ஆண்டுகளாக கிடைக்கவில்லை. இதனால் நம்முடைய அடிப்படை வசதிகளான சாலை, கால்வாய், போன்ற வேலைகள் நடக்கவில்லை. நடக்கும் சில வேலைகளும் அதிகாரிகள் மூலமாக நடக்கிறது. அதிகாரிகள் என்ன பண்ணுகிறார்கள், எந்த வேலைகள் எடுத்தாலும் கமிஷன், கமிஷன், கமிஷன்.. முதியோர் உதவித்தொகை வேண்டுமென்று மனு அளித்தால் உதவித்தொகை வருதா? வரவில்லை.
நம் ஊரில் ஒரு ஊராட்சி தலைவர் இருந்தால் அதை தட்டிக்கேட்பார், தட்டிக்கேட்பதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால், திமுக தலைவர் ஸ்டாலின், கிராமங்களில் கிராம சபாக்கூட்டம் நடத்தச்சொல்ல தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
மோடி, முதல்வராக இருக்கும் போது, கிராம மக்களின் குறைகளை அறிந்தார், இவர் பிரதமரானால் இன்னும் இந்தியாவில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் சலுகைகளை வாரி இறைப்பார் என்று நினைத்தேன். அவரும் பிரதமராக வந்தார். இந்தியாவை மாற்றிக்காட்டுவேன் என்றார். ஆனால் இந்தியாவை மாற்றவில்லை.
ஒரு நாள் இரவு 500, 1000 செல்லாது என்று அறிவித்தார். அப்புறம் 500, 1000 வைத்திருப்பவர்கள் அருகில் இருக்கும் வங்கிகளில் மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொன்னார். நாம் ஆட்கள் எல்லாம் வங்கிகளில் நின்றார்கள், பலபேர் வங்கி வாசலில் மயங்கி விழுந்தார்கள். இந்தியாவில் 50 பேர் உயிரிழந்து விட்டனர். கருப்புபணத்தை ஒழிக்கபோறேன் என்று சொன்னார். ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 இலட்சம் போடுகிறேன் என்றார். ஆனால், இன்றுவரை வரவில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாங்கித்தருகிறேன் என்றார். ஆனால் இன்றுவரை எதுவும் நடக்கவில்லை. என்று எ.வ வேலு பேசினார்.