தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது சென்னைக்குக் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாகச் சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதே சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து கனமழையை எதிர்கொள்ளத் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏரிகளில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. மழையின் போது விழுந்த அனைத்து மரங்களும் அகற்றப்பட்டுள்ளன. 10 மின்மாற்றிகளில் மட்டுமே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன. பிற இடங்களில் மின்சாரம் சீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன. 100 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 8 தேசிய பேரிடர் மீட்புப் படையின் 8 குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளச் சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.
மழைநீர் தேங்கிய இடங்களில் மின் மோட்டார்கள் மூலம் நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். 300 இடங்களில் நிவாரண மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 14 மையங்களில் 600 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழைக்காலங்களில் உயிர்ச்சேதம் வரக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார். அதே சமயம் சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநில அவசரக் கால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி (ஐடி விங்) நிர்வாகிகளைச் சந்தித்து விழிப்போடு செயல்படுமாறு அறிவுறுத்தினார்.