என்.எல்.சிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு அதிகபட்ச இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், விளைநிலங்களை இயந்திரங்களைக் கொண்டு அழித்த என்.எல்.சியை கண்டித்தும், தமிழக அரசு அறிவித்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் பாகுபாடின்றி அனைத்து மகளிருக்கும் வழங்கக் கோரியும், விலைவாசி உயர்வைக் குறைக்காததைக் கண்டித்தும் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க சார்பில் விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம் பாலக்கரை உழவர் சந்தை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தே.மு.தி.க வடக்கு மாவட்டச் செயலாளர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு என்.எல்.சி நிறுவனத்தைக் கண்டித்தும், தமிழக அரசைக் கண்டித்தும் கண்டன உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் என்.எல்.சியை கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தி.மு.க தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளின்படி அனைத்து மகளிருக்கும் ரூபாய் 1000 வழங்க வேண்டும். ஆனால் தற்போது தகுதியானவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக் கூறும் முதல்வர் தேர்தலுக்கு முன்பு இவ்வாறு கூறினாரா? அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்காவிட்டால் அனைத்து மகளிரையும் திரட்டி தி.மு.க அரசுக்கு எதிராக நாங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம். நான் விருத்தாசலம் போராட்டத்தில் பங்கேற்கக் காரணம் என்.எல்.சி பிரச்சனை. என்.எல்.சி நிர்வாகம் விவசாய நிலங்களைப் பிடுங்கி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நீதியரசர் கூறியது போல அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்மணிகளை அழித்ததைப் பார்த்த போது வேதனையாக இருந்தது. விளைநிலங்களை அழிப்பதை நிறுத்தி அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி வீடு, நிலம், வேலை வழங்கிட வேண்டும். மக்களுக்காகத் தான் அனைத்து திட்டங்களும். மக்களை எதிர்த்துக் கொண்டு வரும் திட்டங்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அதனால் மக்களையும் இந்த நாட்டையும் காப்பது நமது ஒவ்வொருவரின் கடமை. காவிரியில் தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். திறந்து விடாததால் இன்று 5 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் வறண்ட பூமியாக மாறி வருகிறது.
ஆனால் கூட்டணிக்காக பெங்களூர் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், காவிரி பிரச்சனை குறித்து எதுவுமே பேசாமல் திரும்பி வந்துள்ளார். அதனால் கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தரவேண்டிய நியாயமான தண்ணீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் சார்பில் நாங்கள் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம். டெல்டா கடைமடை வரை சிறந்த பூமியாக மாற்ற வேண்டியது இந்த அரசின் கடமை. பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை உரிய நேரத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அறிவிப்பார்” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்டச் செயலாளர் உமாநாத், மாவட்ட அவைத் தலைவர்கள் ராஜாராம், பாலு, மாவட்டப் பொருளாளர்கள் தென்னவன், ஏ.பி.ராஜ் மாவட்டத் துணைச் செயலாளர்கள் வேல்முருகன், பாலுசந்தர், ராஜ வன்னியன், இளவரசன், மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் கருணா நன்றி கூறினார்.