திருச்சி பாராளுமன்ற தொகுதியில் திருச்சி கிழக்கு, மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 14 மேசைகள் வீதம் அமைத்து, 84 மேஜைகளிலும், தபால் ஓட்டு எண்ணிக்கை 11 மேஜைகளிலும் 25 சுற்றுக்களாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் ம.தி.மு.க., வேட்பாளர் துரை வைகோ, அ.தி.மு.க., வேட்பாளராக கருப்பையா, பா.ஜ. கூட்டணி சார்பில் அ.ம.மு.க., வேட்பாளராக செந்தில் நாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ராஜேஷ் உட்பட 35 பேர் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் ஏழு லட்சத்து 57 ஆயிரத்து 130 ஆண் வாக்காளர்களும் 7 லட்சத்து 96 ஆயிரத்து 616 பெண் வாக்காளர்களும், 239 மூன்றாம் பாலின வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர். தொகுதி முழுவதும் 699 இடங்களில் 1665 ஓட்டுச் சாவடிகள் அமைத்து ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு நாளன்று ஐந்து லட்சத்து 12 ஆயிரத்து 264 ஆண் வாக்காளர்களும், ஐந்து லட்சத்து 36 ஆயிரத்து 844 பெண் வாக்காளர்களும், 102 மூன்றாம் பாலின வாக்காளர்களும் வாக்களித்தனர். திருச்சி தொகுதியில் மொத்தம் 10 லட்சத்து 49 ஆயிரத்து 210 பேர் வாக்களித்ததன் மூலம் 67.52 சதவீதம் ஓட்டுப்பதிவானது.
தபால் ஓட்டுக்கள் இரண்டு சுற்றுகளாகவும் கந்தர்வகோட்டை சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டுகள் 18 சுற்றுகளாகவும் புதுக்கோட்டை, திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் 19 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டு வருகிறது. அதேபோல், திருச்சி மேற்கு சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டுகள் 20 சுற்றுகளாகவும், திருவெறும்பூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் 22 சுற்றுகளாகவும், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டுகள் 25 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டு வருகின்றன.
திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகளைக் கண்காணிக்க 3 பேரவைத் தொகுதிகளுக்கு தலா ஒரு பாா்வையாளரை இந்தியத் தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதன்படி திருவரங்கம், திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பாா்வையாளராக தினேஷ்குமாரும், திருவெறும்பூா், கந்தா்வக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு ராஜீவ் பிரசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனா். ஓட்டு எண்ணும் பணியில் மொத்தம் 1,627 போ் ஈடுபட்டுள்ளனா். மத்திய, மாநில போலீஸாா், துணை ராணுவப் படையினா் என 1000க்கும் மேற்பட்டோா் 3 அடுக்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில் வாக்கு எண்ணும் பணி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 8665 பேர் தபால் வாக்கு அளித்திருந்தனர். இந்த வாக்குகள் எண்ணும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். அப்போது பொதுத்தேர்தல் பார்வையாளர்கள் ராஜு பிரசாத், தினேஷ் குமார் ஆகியோர் கலெக்டருடன் நேரில் ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டது. அப்போது ஒரு தபால் ஓட்டை டெமோ காண்பிப்பதற்காக பிரித்தனர்.
அந்த வாக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷுக்கு பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. தபால் ஓட்டுகளில் மதிமுக வேட்பாளர் துரை. வைகோ முன்னிலையில் உள்ளார். இதையடுத்து மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்கள் எண்ணும் பணி சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தொடங்கியது. முதலில் இருந்தே மதிமுக வேட்பாளர் துரை. வைகோ தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். திருச்சி மக்களவை தேர்தல் முதல் சுற்று முன்னணி நிலவரம் துரை வைகோ 26186 வாக்குகளும், கருப்பையா 12981 வாக்குகளும், செந்தில்நாதன் 4047 வாக்குகளும், ராஜேஸ் 5847 வாக்குகலும் பெற்றுள்ளனர். திருச்சி தொகுதியில் 13,205 வாக்குகள் வித்தியாசத்தில் மதிமுக முன்னிலை வகித்து வருகிறது.