வேலூர் மாவட்டம் காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. இந்த சோதனையில் ஆவணங்கள், பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல்.
வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வந்துள்ளனர். வருமானவரித்துறை என்றும், தேர்தல் பார்வையாளர்கள் என்றும் அந்த அதிகாரிகள் முரண்பட பேசியதால் தி.மு.கவினர் அவர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் 4 மணிநேரம் வரை அதிகாரிகள் சோதனை நடத்த முடியாமல் காத்திருந்தனர். இதன்பின்னர் இன்று அதிகாலை 3 மணியளவில் சோதனையை தொடங்கினர்.
காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பி.இ. கல்லூரி மற்றும் சிபிஎஸ்இ பள்ளியிலும் சோதனை நடைபெற்றது. கல்லூரியில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. பள்ளியில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் ஆவணங்கள் மற்றும் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.