மதிமுக முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தனது மகளின் திருமணத்திற்காக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அதனைப்பெற்று கொண்ட முதல்வர் ஸ்டாலின் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
இந்த சந்திப்பு குறித்து துரை வைகோ, “எனது மகள் திருமண அழைப்பிதழை அளித்தேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் மணமக்களுக்கு வாழ்த்துக்களைக் கூறுவதாகத் தெரிவித்தார்.தலைவர் வைகோவின் உடல் நலன் குறித்து முதல்வர் மிகுந்த அக்கறையுடன் கேட்டு அறிந்தார். அண்மையில் அமெரிக்கா சென்று வந்த முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் பயணம் வெற்றிகரமாக அமைந்தது குறித்து அவரிடம் எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். அமெரிக்காவில் 17 நாட்களில் 25 நிறுவனங்களுடன் மேற்கொண்ட சந்திப்பில் ரூ.7,618 கோடி மதிப்பிலான 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதிற்கும் , இதன் மூலம் 11,516 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும் முதல்வரின் அமெரிக்கப் பயணம் தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனைப் பயணமாக அமைந்தது என்று முதல்வரிடம் தெரிவித்தேன்.
குறிப்பாக எனது திருச்சிராப்பள்ளி தொகுதியில் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்து தரும் ஜேபில் நிறுவனம் (Jabil Industries) 2000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை தொடங்க இருப்பதாகவும், இதனால் ஐயாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தேன்” எனக் கூறியுள்ளார்.