நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவுக்கு எதிராக பாஜக பிரமுகர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்நிலையில், 'நீட்தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது’ என ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவுக்கு எதிரான பாஜக வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. தேர்தல் அறிக்கையில் அறிவித்ததன் அடிப்படையில் கொள்கை முடிவாக குழு அமைக்கப்பட்டது என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ''நீட்தேர்வு விவகாரத்தில் தமிழக பாஜகவின் இரட்டை நிலைப்பாடு வெளியே வந்துள்ளது. நீட் தேர்வு பற்றிய ஆய்வுக் குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி பிரமாண பத்திரம் ஜூலை 5இல் தாக்கல் செய்யப்படும். எதற்காக குழு அமைத்தோம் என்பது போன்ற விவரம் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டெல்டா பிளஸ் கரோனா ஆய்வகம் அமைக்கப்படும்'' என தெரிவித்தார்.