மது போதை தலைக்கேறியதும் என்ன செய்கிறோம் என்பதை உணர்வதில்லை குடிமகன்கள். இதனாலேயே பல விபத்துகளும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படுவதுடன் பல நேரங்களில் உயிர்ப்பலிகளும் நடந்துவிடுகிறது. அப்படி ஒரு ஆபத்தான வேலையை தான் குடிமகன்கள் செய்திருக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் வேம்பங்குடி கிழக்கு. இந்த கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.2.73 லட்சத்தில் 'அயோத்திதாஸ் பண்டிதர் மேம்பாட்டுத் திட்டம் 2023-2024' திட்டத்தின் கீழ் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்த பிறகு பணிகள் பற்றிய விபரங்களை தகரப் பலகையில் எழுதி சாலை ஓரம் வைத்துள்ளனர்.
நேற்று இரவு அந்தப் பகுதியில் மது அருந்திய சிலர் மது போதை தலைக்கேறியதும் சாலை ஓரம் நடப்பட்டிருந்த சாலைப் பணிகள் பற்றிய விபரங்களை தகரப் பலகையை அடியோடு பிடுங்கி அருகில் உள்ள மின்மாற்றியின் மீது தொங்கவிட்டுச் சென்று விட்டனர். தகரப் பலகையை தொங்கவிட்ட போது சில அங்குலம் பக்கவாட்டிலோ, மேலேயோ தூக்கி இருந்தால் மின்கம்பியில் உரசி மின்விபத்து ஏற்பட்டு தகரப் பலகையை தூக்கிப் போட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
மது போதையில் இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தான் சில நேரங்களில் உயிர்ப்பலிகள் வரை கொண்டு சென்று விடுகிறது என்று கூறும் பொதுமக்கள், மேலும் சாலைகள், விளைநிலங்கள், பொது இடங்களில் அமர்ந்து மதுஅருந்தும் மதுப்பிரியர்கள் மதுக் குடித்து முடித்ததும் போதையின் உச்சத்தில் காலிப் பாட்டில்களை உடைத்துப் போடுவதால் பலர் பாதிக்கப்படுகின்றனர் என்கின்றனர்.