
ராணிப்பேட்டையில் தலைநிற்காத போதையில் இளைஞர்கள் மூன்று பேர் தெருவில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபடும் சிடிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் இரண்டு தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் தலைநிற்காத அளவிற்கு மதுபோதையில் வரும் இளைஞர்கள் மூன்றுபேர் ஒரு தெருவுக்குள் புகுந்து அங்கிருந்த இருசக்கர வாகனங்களை வரிசையாக தள்ளிவிட்டுக்கொண்டே செல்கின்றனர். அதனைத்தொடர்ந்து அந்த இளைஞர்களை அப்பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் தட்டிக்கேட்ட நிலையில் அவர்கள் மீது போதை இளைஞர்கள் சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டனர். இந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்து வந்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்ற 20 வயது இளைஞனை கைது செய்து விசாரித்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சில இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.