திருப்பூர், ராயபுரம் பகுதியில் நடந்துவந்த மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தனியார் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் திறப்பு விழா நடத்தப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார். அந்த பள்ளிக்கு துரோணா பாடசாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி என பெயரிடப்பட்டிருந்தது.
இதைப்பார்த்து அதிர்ந்த பொதுமக்கள், பள்ளியின் பெயரை மாற்றக்கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து துரோணா பாடசாலை என்ற பெயரை மாநகராட்சி நிர்வாகம் நீக்கியது.
துரோணா என்பது மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரம். தன்னை சிலையாக வடித்து, மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு வில்வித்தை கற்றுக்கொண்ட ஏகலைவனிடம் குருதட்சணையாக, வில்வித்தைக்கு முக்கியமான அவனின் கட்டைவிரலைக் கேட்டார் என்றும், ஏகலைவன் கட்டைவிரலை வெட்டிக்கொடுத்தான் என்றும் மகாபாரதத்தில் வரும்.