ஒரே வாரத்தில் ஆட்டோ கேஸ் விலை 9 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து இந்தியன் ஆயில் அலுவலகத்தை ஓட்டுநர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பெட்ரோல், டீசல், ஆட்டோ கேஸ் ஆகியவற்றின் விலைகளை கடந்த 15 நாட்களாக தினசரி எண்ணெய் உயர்த்தி வருகிறது. கடந்த 8 நாட்களில் 3.40 ரூபாய் உயர்த்தப்பட்டு பெட்ரோல் லிட்டர் 110.85 ரூபாய்க்கும், 3.42 ரூபாய் உயர்த்தப்பட்டு டீசல் லிட்டர் 100.94 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதற்கு ஈடாக ஆட்டோ கேஸ் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. 8.76 ரூபாய் உயர்த்தப்பட்டு கிலோ 73.17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் ஓட்டுநர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்த விலை உயர்வுகளை திரும்ப பெற கோரி வெள்ளியன்று (ஏப்.8) நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் தலைமை அலுவலகம் முன்பு ஆட்டோ, மோட்டார் வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது திடீரென்று ஒரு பகுதியினர் முன்னேறி சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கம், சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் உமாபதி, துணைப்பொதுச் செயலாளர் பாபு, மோட்டார் வாகன சங்க தலைவர் தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் பா.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.