மேட்டூர் அருகே, கடைசி வாய்ப்பிலும் நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் மருத்துவர் ஆகும் கனவு கானல் நீராகி விடுமோ என்ற மன அழுத்தத்தால், விவசாயியின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூரைச் சேர்ந்தவர் சிவகுமார். விவசாயி. இவருடைய மகன் தனுஷ் (வயது 19). மேட்டூரில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் கடந்த 2019- ஆம் ஆண்டு பிளஸ்2 முடித்தார். கடந்த இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் அதில் தோல்வி அடைந்திருந்தார். அதனால் ஏமாற்றம் அடைந்த தனுஷ், மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பாக நடக்கும் நீட் தேர்வுக்காகக் கடுமையாகப் படித்து வந்தார். இந்நிலையில் நீட் தேர்வு நடைபெற்ற நாளான நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துக்களையும், இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ''நீட் தேர்வு ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி சரிசமமான வாய்ப்பை நீட் தேர்வு வழங்குகிறது'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், அவர் தெரிவித்துள்ளதாவது, ''பணத்திற்குப் பதில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் மருத்துவம் படிக்கலாம் என்ற நிலையை நீட் தேர்வு உருவாக்கியுள்ளது. நீட் வழங்கும் சமவாய்ப்பினால் நுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதம் கடந்த இரண்டு வருடங்களாகத் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது கொண்டுவந்த நீட் தேர்வை திமுக தற்பொழுது எதிர்ப்பதுதான் நாடகம். நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு எதிரான தேர்வு எனத் திட்டமிட்டு தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. நீட் தேர்வை எதிர்ப்பதுபோல் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பது கவலைக்குரியது. பொருளாதார சூழலால் மருத்துவப் படிப்பைப் பெற இயலாத மாணவர்களுக்கு நீட் தேர்வு மருத்துவம் படிக்கும் வாய்ப்பை வழங்கும்'' என்றார்.