பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் சட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது குற்றங்களுக்கு எதிராகக் கூடுதல் தண்டனை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் தாக்கல் செய்தார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராகக் குற்றம் செய்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில், வரதட்சணை மற்றும் பாலியல் தொழில் போன்ற ஒழுங்கற்ற செயல்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனைகளை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதில், பிரிவு 304பி வரதட்சணை தொடர்பான மரணங்களுக்குத் தற்போது இருக்கும் 7 ஆண்டு சிறைத் தண்டனையை அதிகரித்து 10 ஆண்டாகவும், பிரிவு 354பி குற்ற நோக்கத்துடன் பெண்களின் ஆடைகளைக் களைதல் போன்ற ஒழுங்கற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்பட்டிருந்த 3 ஆண்டு தண்டனையை 7 முதல் 10 ஆண்டுகளாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிவு 354டி தவறான குற்ற நோக்கத்தோடு பெண்களைத் தொடர்வதும் 2ஆம் முறையும் அதே குற்றத்தைச் செய்வதற்கும் தற்போது 5 ஆண்டுகளாக இருக்கும் சிறைத் தண்டனை அதிகபட்சமாக 7 ஆண்டுகளாகவும், 372ன் படி பாலியல் தொழிலுக்காக 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை, பெண்களை விற்பனை செய்தல் மற்றும் 373ன் படி பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட பெண்களை விலைக்கு வாங்குதல் ஆகியவற்றுக்கு அதிகபட்சமாக இருக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனையை குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை வழங்க புதிய சட்டத்தின் படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.