திமுக சார்பில் சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''காயிதே மில்லத் கல்லூரியை உருவாக்கியவர் கலைஞர். காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் கொடுத்தவர் கலைஞர். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இஸ்லாமியர்கள் வேறு தான் வேறு என்று கலைஞர் என்று நினைத்ததில்லை. இஸ்லாமியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்று நடந்தபோது கலைஞர் பேசுகின்ற போது சொன்னார் 'எனக்கு நன்றி சொல்லிப் பேசினார்கள் நன்றி சொல்லி உங்களிடம் இருந்து என்னைப் பிரித்து விடாதீர்கள்' என்று சொன்னவர் கலைஞர்.
அதே வழித்தடத்தில் தான் இப்பொழுது திமுகவின் ஆட்சி. மன்னிக்க வேண்டும் நமது ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சி அமைந்த உடன் சிறுபான்மையினருக்கு ஆணையம் அமைக்கப்பட்டது. சிறுபான்மை விடுதியில் பண்டிகைகளுக்கு சிறப்பு உணவு வழங்கப்படுகிறது. ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடிய விழாவாக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. எவராலும் தொட்டுப் பார்க்க முடியாத அளவில் உயிரோட்டம் கொண்ட சக்தியாக திமுக விளங்குகிறது'' என்றார்.