'தூர்தர்ஷனை காவிமயமாக்காதே' என பாஜக அரசுக்கு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம் விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் மருத்துவர் த. அறம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஒளிபரப்பு நிறுவனம் தூர்தர்ஷன். சமீபத்தில் அதன் இலச்சினையின் நிறம் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளது.
தூர்தர்ஷன் பொதிகை என்பதை சமீபத்தில் 'டிடி தமிழ்' என்று மாற்றிய தூர்தர்ஷன் நிறுவனம், அதனுடைய இலச்சினையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது.
இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் காவி நிறம் என்பது ஒரு கட்சியின் அடையாளமாக இருக்கும்போது, இந்த நிறம் மாற்றம் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. அந்தக் கட்சிக்காக அரசு தொலைக்காட்சி நிறுவனமே கட்டணம் இல்லாமல் பிரச்சாரம் செய்கிறதா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது.
தூர்தர்ஷன் மேலதிகாரிகள் இந்த நிறமாற்றம் காவிநிறமல்ல, ஆரஞ்சு நிறம் என விளக்கம் அளித்துள்ளனர்.ஏன் இந்த நிறமாற்றம் தேர்தல் நடைபெறும் போது செய்தார்கள்? அதற்கான அவசரத் தேவை என்ன வந்தது இப்போது? இது அந்தக் கட்சிக்கான அரசியல் ஆதாயத்திற்கானது என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.
சமீபத்தில் ஏப்ரல் 5 அன்று இரவு 8 மணி மணிக்கு 'கேரள ஸ்டோரி' படத்தை அரசு நிறுவனமான தூர்தர்ஷன் ஒளிபரப்பியது மிகுந்த சர்ச்சையை உண்டு பண்ணியது. கேரள முதல்வர் வேண்டுகோளையும் மீறி இது ஒளிபரப்பப்பட்டது.
ஒரு மதப் பிரிவினரை, ஒரு மாநிலத்தை வஞ்சிக்கும் வகையில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது, எவ்வாறு ஒரு அரசு தொலைக்காட்சி நிறுவனமே தேர்தல் நேரத்தில் அதை ஒளிபரப்பு செய்யலாம்?
தேர்தல் நேரத்தில் மத மோதலை உண்டு பண்ண ஒரு அரசு தொலைக்காட்சி நிறுவனமே தூண்டியதாகவே கருத வேண்டியுள்ளது.
இதையெல்லாம் தேர்தல் ஆணையம் ஏன் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது? தேர்தல் ஆணையம் இருக்கிறதா? என்ற கேள்விகள் எல்லாம் இந்திய மக்களின் மனங்களில் எழுந்துள்ளது.
எனவே உடனடியாக தேர்தல் ஆணையம் தூர்தர்ஷன் இலச்சினை கலர் மாற்றத்தை ரத்து செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது' என்று கூறப்பட்டுள்ளது.