மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறுவதை சமூக குற்றமாக பார்க்கக்கூடாது என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசின் முதலாவது சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறுவது குறித்து பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ''ஒன்றியம் என்பது தவறான சொல்லல்ல. ஒன்றியம் என்ற சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவோம். ஒன்றியம் என்ற சொல்லைப் பார்த்து மிரளத் தேவையில்லை. ஒன்றிய அரசு என்ற சொல்லைக் கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் பயன்படுத்துகிறோம். எனவே அதை ஒரு சமூகக் குற்றமாக பார்க்கக்கூடாது. மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இருப்பதே ஒன்றியம் என்பதற்குப் பொருள்.
ஒன்றிய அரசு என்ற பதத்தை தற்போதுதான் திமுக பயன்படுத்திவருவதாகவும், முன்னாள் முதல்வர் கலைஞர் அல்லது யாரும் பயன்படுத்தவில்லை என்பது போன்ற தகவல் வெளிப்படுத்தப்பட்டுவருகிறது. அது தவறான விஷயம். 1957இல் திமுக தேர்தல் அறிக்கையிலேயே ஒன்றிய அரசு என்ற சொல் பயன்படுத்தபட்டுள்ளது'' என விளக்கமளித்துள்ளார்.
மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதே அரசின் கோரிக்கை. தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பாஜக குரல் கொடுக்க தயாரா என நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.