
கடந்த சில தினங்களுக்கு முன்பு, கேரளாவின் ஆலப்புழா நகரிலுள்ள ஏரிக்கரையோரம், வாத்துகள் கொத்துக் கொத்தாக திடீரென்று செத்து விழுந்தன. தொடர்ந்து கோட்டயம் பகுதியிலுள்ள வாத்துகள் இரையெடுக்க முடியாமல் செத்து மடிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து கேரள கால்நடைத்துறையின் இயக்குனர் குழு, ஸ்பாட்டிற்கு விரைந்து வந்து மடிந்த வாத்துகளை உடற்கூறாய்வு செய்ததில், பறவைக் காய்ச்சலுக்கான வைரஸ் தாக்குதல் இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனால், தடுப்பு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டன.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோழி, வாத்துகள் கொண்டு வரத் தடை விதித்துள்ள தமிழக கால்நடைத்துறை, எல்லைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மேலும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்குக் கிருமிநாசினி தெளிக்கப்பட்டப் பின்பே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கேரள பண்ணைக் கோழிகளைத் தமிழக எல்லைகளில் உள்ள கிராமங்களில் விற்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நன்கு சமைத்த கோழி இறைச்சி, முட்டைகளை உண்பதால் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவாது எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவும் வாய்ப்பு மிகவும்குறைவு எனவே பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளவேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.