சேலத்தில் ஒரே நாளில் 63 பேரை தெருநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலத்தில் அதிகாலை 5 மணிக்கு சேலம் கிச்சிப்பாளையத்தில் 75 வயது முதியவரை கடித்த கருப்பு நிற வெறி நாய் ஒன்று கண்ணில் பட்டவர்களை எல்லாம் விரட்டி விரட்டி கடித்துக் குதறி இருக்கிறது. இப்படி கடித்துக்குதறிய அந்த கருப்பு நிற நாயை விரட்ட முயன்றவர்களையும் அந்த வெறிநாய் விட்டுவைக்கவில்லை.
கற்களால் தாக்கியும், கட்டையால் அடித்தும் கூட அந்த வெறிநாய் அப்பகுதியில் உள்ள 63 பேரை வெறிகொண்டு கடித்தது. கலராம்பட்டி, காந்திமகான் தெரு என அந்த நாய் ஓடிய இடமெல்லாம் மக்களை வெறிகொண்டு கடித்து குதறியது. இந்த தகவல் அறிந்த பொதுமக்கள் கடும் பீதியில் வீட்டை விட்டு வெளியே வராத வண்ணம் வீட்டில் அடங்கிக் கிடந்தனர். அந்த அளவுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.
இது குறித்து சேலம் மாநகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதனை பிடிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு நாய்க்கடி தடுப்பூசி மருந்து இருந்ததால் நாய் கடியால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து வந்தவர்களுக்கு ரேபீஸ் வைரஸ் பாதிக்கப்படாமல் இருக்க தடுப்பூசி போடப்பட்டது.
மொத்தம் 63 பேரை அந்த நாய் கடித்து குதறி உள்ளது. இதற்கிடையே அந்த நாயை பிடிக்க சில நபர்களையும் கடிக்க பாய்ந்த நிலையில் இறுதியில் அந்த நாய் பொதுமக்களால் அடித்து கொல்லப்பட்டது. கோடை வெயில் சுட்டெரிக்கும் காலங்களில் நாய்கள் இதுபோன்று வெறிகொண்டு அலைவது வாடிக்கை என்றாலும் ஒரே நாளில் 63 பேரை வெறி நாய் கடித்து குதறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.