ராஜஸ்தான் மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு காரணமாக இறந்துவிட்டார். பெண்ணின் இறப்பிற்கு மருத்துவர் அர்ச்சனா தான் காரணம் என உறவினர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தினர். இதனால் காவல் துறையினர் மகப்பேறு மருத்துவர் அர்ச்சனா மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனால் மன உளைச்சலும் வேதனையும் அடைந்த மருத்துவர் அர்ச்சனா கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் இந்திய மருத்துவ மன்றத்தில் இன்று காலை அதன் தலைவர் மருத்துவர் மோகன் மற்றும் செயலர் மருத்துவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமையில் மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உள்ளிருப்பு போராட்டத்தின் கோரிக்கைகளாக மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர் அர்ச்சனா சர்மா மீது தவறான வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது உடனடி வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மருத்துவர் அர்ச்சனா ஷர்மாவின் குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்கக் கோரியும், நீண்டகால கோரிக்கையான மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய அரசின் சட்டம் தேவை எனவும், மருத்துவர்களை குற்றவாளிகளாக பதிவு செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளில் மாற்றம் செய்யக் கோரியும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இழப்பீடு கேட்கும் வழக்குகளிலிருந்து மருத்துவத் துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் இந்திய மருத்துவ சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.