திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கோணலூர் கிராமத்தை சேர்ந்த சங்கீதாவும் அவரது வயற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தனர். தவறான சிகிச்சையால் தான் இருவரும் உயிரிழந்துள்ளனர் என கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இறந்த பெண்ணின் உடலை உடற்கூராய்வு முடித்து தருவதற்கு காலதாமதம் ஆனதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மருத்துவக் கல்லூரி டீனிடம் விசாரித்துள்ளார். இதற்கான விளக்கத்தை சட்டம் சார்ந்த மருத்துவத் துறையில் பிரேதப் பரிசோதனை பிரிவு மருத்துவர் கமலக்கண்ணன் ஜூன் 1ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று ஆட்சியரிடம் கொடுத்துள்ளார். அப்போது மருத்துவரை கலெக்டர் பலரின் முன்னிலையில் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனை கல்லூரி டீன் மற்றும் மருத்துவமனை மருத்துவ அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து நேற்று (02.06.2023) கலெக்டரின் அநாகரிகப் பேச்சை கண்டித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் சோஜி தலைமையில் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்காத பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்.