
மத்திய அரசு நாடு முழுக்க மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியா முழுவதும் இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) சார்பாக டாக்டர்கள் 18ந் தேதி கருப்பு பட்டை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையில் அதிகளவு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களும் உயிரிழந்துள்ள நிலையில் வடமாநிலங்களில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது சமூக விரோதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சட்டவிரோத செயலை கண்டிக்கும் வகையில் இந்திய அளவில் மருத்துவர்கள் 18ந் தேதி ஒரு நாள் கருப்பு பட்டை அணிந்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒருபகுதியாக ஈரோட்டில், இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் டாக்டர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் போது "உயிர் காக்கும் மருத்துவர் உயிருக்கு உறுவிளைவிக்காதே.., மருத்துவர்களும் மனிதர்கள் தான் என்பதை மதித்து நட.." என கோஷம் எழுப்பியும், மருத்துவர்களை பாதுகாக்கும் மருந்துவமனை பாதுகாப்பு சட்டத்தை தேசிய அளவில் நடைமுறைபடுத்த வேண்டும். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.