Skip to main content

பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த மருத்துவர்; போலீசார் தீவிர விசாரணை

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
Doctor lost his lives locked house Police are investigating in chennai

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் (31). இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும், அனிதா (29) என்ற பெண்ணும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. மருதுபாண்டியனின் மனைவி அனிதா, கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். 

வேலை நிமித்தம் காரணமாக, அனிதா கூடுவாஞ்சேரியில் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வந்தார். அதே போல், மருதுபாண்டியன் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனி வீட்டில் வசித்து வந்தார். அனிதாவும், மருதுபாண்டியனும் தினமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். அதன்படி, கடந்த 9ஆம் தேதி பணி முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்த மருதுபாண்டியனை அனிதா செல்போன் மூலம் அழைத்துள்ளார். ஆனால், மருதுபாண்டியன் அவரது அழைப்பை எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து, நேற்று முன் தினம் (10-12-23) காலை மீண்டும் அனிதா மருதுபாண்டியனை தொடர்பு கொண்டுள்ளார். அப்போதும், மருதுபாண்டியன் செல்போனை எடுக்கவில்லை.

வெகுநேரம் ஆகியும் மருதுபாண்டியனை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த அனிதா, அவருடைய உறவினரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு மருதுபாண்டியன் வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அதன்படி, அனிதாவின் உறவினர்கள், அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது, மருதுபாண்டியனின் வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால், அந்த உறவினர்கள் அறை கதவை தட்டிப் பார்த்துள்ளனர். வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். 

அப்போது, மருதுபாண்டியன் வீட்டின் அறையில் மயங்கிய நிலையில் கட்டிலில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவரான உறவினர்களில் ஒருவர் மருதுபாண்டியனை பரிசோதித்து பார்த்தார். அப்போது, மருதுபாண்டியன் இறந்து கிடப்பது தெரியவந்தது. உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த சூளைமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்ற காவல்துறையினர், மருதுபாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்