கரோனா காரணமாகத் தமிழகத்தில் பள்ளிகள் ஒரு வருடத்திற்கு மேலாக மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்கள் நீண்ட நாட்களாகப் பள்ளிக்குச் செல்லமுடியாமல், ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களைப் படித்து வந்தனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குச் செப்டம்பர் மாதம் முதல் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் முதல் தேதியிலிருந்து மற்ற வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளி துவங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகள் திறப்பு தொடர்பாகப் பேசினார். அதில் " தமிழகத்தில் நிச்சயமாக வரும் 1ம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும். இந்த வருடம் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்த வாய்ப்பில்லை. 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்குத் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு தேர்வு நடைபெறும். 5 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் நீண்ட நேரம் முகக்கவசம் அணிந்து வகுப்புகளைக் கவனிக்கக் கடினமாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம். எனவே, பெற்றோர் விரும்பினால் மாணவர்களை முன்னரே வீடுகளுக்கு அழைத்துச் செல்லலாம்" என்றார்.