உடுத்துவதற்கு மேல் சட்டை இல்லை. ஆனாலும், வாயையும் மூக்கையும் மறைத்து துண்டால் கட்டியிருக்கிறார். இத்தனைக்கும், சுப்பையா ஒரு பிச்சைக்காரர். மதுரை ரயில் நிலையத்தில் கையேந்திக் கொண்டிருந்த அவர், "ஆமாங்க, கரோனாவுக்கு பயந்து பக்கத்துலயே வரமாட்டேங்கிறாங்க. முகத்துல துண்டைக் கட்டிய பிறகுதான், ஒண்ணு ரெண்டு பேர் பிச்சை போடறாங்க.." என்றார்.
ரயில் நிலையங்களில் குழாய்களில் தண்ணீர் வருவதே அபூர்வம். மதுரை ரயில் நிலைய குழாய்களில் தண்ணீர் தாராளமாக வருகிறது. ஒவ்வொரு தண்ணீர்க் குழாய் அருகிலும் பாட்டிலில் சோப்பு கரைசல் வைத்திருக்கின்றனர். ரயில் நிலையத்துக்குள் வருபவர்கள் ஒருவரையும் விட்டு வைக்காமல், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை ஊழியர்கள், காய்ச்சல் அறிகுறி உள்ளதா என சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர்.
நாடும் சரி, மக்களும் சரி, கரோனா தடுப்பில் உஷாராகத்தான் இருக்கிறார்கள். கரோனா வைரஸாகப் பார்த்து, மனது வைத்து, பரவாமல், வந்த சுவடே தெரியாமல் அழிந்துவிட வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.