நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று இருக்கும் நிலையில், 52 வார்டுகளை கொண்ட நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ், மதிமுக கூட்டணி, பாஜக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டன.
இதில் திமுக சார்பில் 17- ம் வார்டில் போட்டியிட்ட 21 வயதேயான கௌசுகி 641 வாக்குகள் எடுத்து தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக, அதிமுக வேட்பாளா்களை தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தார். எந்த அரசியல் அனுபவம் இல்லாத கௌசுகி முதல் தேர்தலிலே கிடைத்த வெற்றியால் வாக்கு எண்ணும் மையத்தில் மகிழ்ச்சி பொங்க துள்ளி குதித்த அவர் வெற்றி குறித்து நம்மிடம் பேசினார்.
“என் தாத்தாவும், அப்பா இளஞ்செழியனும் திமுக பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் எனக்கும் தி.மு.க.வில் ஈடுபாடு இருந்துவந்தது. 21 வயதான நான் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் பி.ஏ பட்டப்படிப்பு முடித்துவிட்டு அடுத்து சட்டம் படிப்பதற்கு மனு செய்துள்ளேன்.
மாநகராட்சி வார்டில் போட்டி போட நானாகவே விருப்பப்பட்டு தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தேன். கட்சி என் மீது நம்பிக்கை வைத்து சீட்டும் கொடுத்தது. அவர்கள் வைத்த நம்பிக்கையில் நான் வெற்றி பெற்றுள்ளேன். அதே போல் என் மீது நம்பிக்கை வைத்து ஓட்டுக்கள் போட்ட என் வார்டு மக்களுக்கு இரவு பகல் என்று பாராமல் உழைப்பேன். அதே போல் மக்களுக்கு திமுக ஆட்சி கொடுக்கும் உதவிகளையும் நலத்திட்டங்களையும் பாரபட்சமின்றி கிடைப்பதற்கும் அதே போல் வார்டின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி நிச்சயம் கொடுப்பேன்.
தமிழகத்தில் நான் தான் வெற்றி பெற்ற இளம் வேட்பாளர் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. அந்த வாய்ப்பை எனக்கு தந்த திமுக தலைமைக்கு நன்றி தெரிவிப்பதோடு முதல்வர் ஸ்டாலினையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெறுவேன். என்னை போன்ற மற்ற இளைஞர்களும் மக்களுக்கு சேவை செய்ய இந்த மாதிரி பொறுப்புகளில் வரவேண்டும் என்றார்.