2019 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளைக் கவனிக்க வசதியாக தொகுதிக்கு இரண்டு பொறுப்பாளர்கள் வீதம் தமிழகம் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் திமுக அறிவித்துள்ளது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கடந்த 17ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. ஆலோசனை முடிவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை திமுக தலைமை அறிவித்தது. இதில் புதுமுகங்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் வழக்கறிஞர்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். இளம் திமுக நிர்வாகிகளுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருக்கிறது. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அந்த பகுதியில் வாழும் சமுதாய மக்களுக்கு தகுந்தவாறு பொறுப்பாளர்களை திமுக தலைமை நியமித்து இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் திமுக தங்களின் பூத் கமிட்டி பணிகளுக்காக 12 எம்எல்ஏக்கள் கொண்ட பெயர்ப்பட்டியலை வெளியிட்டது.
அந்தப் பட்டியலில் இருந்த பலரும் இந்த பொறுப்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள் திமுகவின் மூத்த உறுப்பினரான சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் பூங்கோதை ஆலடி அருணா ஆகிய இரண்டு பெண்களின் பெயர்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாமல் படுதோல்வி அடைந்த நிலையில் திமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு மிகத் தீவிரமாக செயல்பட தொடங்கி இருப்பதை இந்த பொறுப்பாளர் நியமனம் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராக இருப்பதாக பேசி வந்த நிலையில் திமுக ஒட்டுமொத்தமாக தனது பொறுப்பாளர்களை நியமித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.