திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சட்டமன்றத் தொகுதியை எதிர்க்கட்சியான அதிமுக தக்கவைத்ததின் பெயரில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தான் தொகுதியில் உள்ள கோட்டையூர் ஒன்றிய குழு உறுப்பினரும் அதிமுக வடக்கு ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளருமான சத்தியமூர்த்தி, சாத்தம்பாடி ஒன்றிய குழு உறுப்பினரும் அதிமுக தெற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்றச் செயலாளருமான பழனிசாமி, ஆவிச்சிபட்டி ஒன்றிய குழு உறுப்பினர் அம்மாபொண்ணு, சிறுகுடி ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ்குமார், புதுப்பட்டி ஒன்றிய குழு உறுப்பினரும் அதிமுக வடக்கு ஒன்றிய துணைச் செயலாளருமான இந்திரா செல்வராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சரான சக்கரபாணி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை அமைச்சர் பொன்னாடை போற்றி வரவேற்றார்.
இதில் நத்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம், திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, நத்தம் பேரூராட்சி தலைவர் சிக்கந்தர் பாட்ஷா, நத்தம் தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், நத்தம் வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் எதிர்க்கட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ஆளுங்கட்சி பக்கம் தாவியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.