கரூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணிச் சார்பில் இளைஞரணி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கரூர் சி.எஸ்.ஐ. பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி பேசும் போது.. இந்திய அரசியல் இயக்கங்களில் அதிக இளைஞர்களை இலட்சோப லட்ச வீரர்களை கொண்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் தான். கடந்த ஆண்டு இதே மாதம் மூன்றாம் தேதி இதே சிஎஸ்ஐ விளையாட்டு மைதானத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகளைத் துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றார்கள். அந்த மேடைகளில் பேசி கழக இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பேசுகின்ற பொழுது அடுத்த ஆண்டு இங்கே நடைபெறுகின்ற நிகழ்ச்சியின் பொழுது இளைஞரணிச் செயலாளராக வர வேண்டும் என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார்கள் அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது. கடந்த வாரம் ஆளும் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி நிகழ்ச்சி நடத்தியது.
இங்கே இருக்கும் தம்பிமார்கள் வருகின்ற சட்டமன்றதேர்தல் தான் அடுத்து வருகின்ற தேர்தல் இந்த தேர்தலின் போது ஒவ்வொரு இளைஞனும் தங்களுடைய பங்களிப்பை கழகத்திற்கு நீங்கள் வழங்க வேண்டும். நம்மால் நிச்சயம் ஒவ்வொருத்தரும் பத்து வாக்குகளை கழகத்திற்கு உதயசூரியன் சின்னத்திற்கு நம்மால் பெற்றுத்தர முடியும் வந்திருக்கக்கூடிய தம்பிமார்கள் ஒவ்வொருவரும் தன்னால் பத்து வாக்குகளை நான் உதயசூரியன் சின்னத்திற்கு பெற்றுத்தர பாடுபடுவேன் என்ற உறுதியை இந்த இளைஞர் அணிக் கூட்டத்திலே அன்பிற்குரிய இளைஞரணிச் செயலாளர் முன்னிலையில் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.
உதயநிதி ஸ்டாலின் பேசும் போது,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன், கருணாநிதியின் பேரன் என்பதை விட எனக்கு மாநில இளைஞரணிச் செயலாளர் பதவி பெரியதல்ல. எப்போதும் தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டரில் ஒருவராக இருந்தே நான் செயலாற்ற விரும்புகிறேன்.
என்னைப் பிரித்து பார்க்காமல் இளைஞரணியினர்தான் ஒருங்கிணைந்து எனக்கு வழிகாட்ட வேண்டும். 30 லட்சம் உறுப்பினர்களை இளைஞரணியில் சேர்க்க இலக்கு நிர்ணயித்திருந்தோம். அதில் 25 லட்சம் சேர்ந்து விட்டதை, தலைவர் ஸ்டாலினிடம் கூறினேன். அப்போது அவர் பாராட்டு தெரிவிக்கவில்லை. மாறாக 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டுகோள் விடுத்தார்.
செந்தில்பாலாஜி என்னை அண்ணன் என்றார். என்னை விட 3 வயது மூத்தவர் அவர். அவரை இளைஞர் அணியில் சேர்த்துக்கொள்கிறோம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள், ஆனால் ஓரே கல்லில் பல மாங்காய் அடிப்பவர் செந்தில்பாலாஜி. கடந்த முறையே என்னை ஒரு நாள் முழுக்க வச்சு செஞ்சுட்டார். இப்பவும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு பண்ண சொன்னேன். ஆனா தொடர்ந்து நிகழ்ச்சி நடத்திட்டார். எல்லோரையும் உறவு முறை வைத்து அழைக்கிறார். ஒரு மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சரியான உதாரணம் அவர் தான்.
அதனை நோக்கி நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 42 ஆயிரம் பேர் இளைஞரணியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும். இளைஞரணி என்பது அரசியலுக்கானது மட்டும் அல்ல. மாறாக சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது, குளம் தூர்வாரி நீர்நிலைகளை பாதுகாப்பது, மரக்கன்று நடுவது போன்ற சமூக மேம்பாட்டு பணிகளிலும் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான முதல் கட்ட போராட்டத்தை இளைஞரணி முன்னெடுத்து சென்றது. தற்போது டெல்லியில் அமைதியாக போராடியவர்கள் மத்தியில் வன்முறை வெடித்து 50 பேர் இறந்து உள்ளனர். இதற்கு பிரதமர் மோடி ஒரு சின்ன வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.
பிரதமர் என்கிற அடிப்படையில் இந்தியாவையே மோடி கட்டுக்குள் வைத்திருந்தாலும், தமிழக மக்களின் ஆதரவு எப்பவுமே எங்க டாடிக்கு தான். இதே எழுச்சியுடன் இளைஞரணியினர் வருகிற 2021 சட்டசபை தேர்தலில் 234 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரானதும் மக்களின் தேவையை உணர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
இரவு பகலாக படித்து அரசு வேலைக்குச் சென்றால் வாழ்வு கிடைக்கும் என பலர் தேர்வு எழுதி வருகின்றனர். ஆனால் தற்போது டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வு முறைகேடு அம்பலமாகியுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் 80 சதவீத வெற்றியை தி.மு.க. கூட்டணி பெற்றுள்ளது. கரூரில் நடந்த அட்டூழியத்தால் வெற்றி பறிபோயிருக்கிறது. இதற்காக துவண்டு விட வேண்டாம். சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
முன்னதாக கரூர் வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு மண்மங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அங்கு மரக்கன்று நட்டு வைத்தார். பின்னர் கரூர்-கோவை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் அரங்கில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அங்குள்ள ஒரு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுக்கட்சியினர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் கரூரில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடந்த குதிரை வண்டி பந்தயத்தை தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசு வழங்கினார்.