கரூர் மாவட்டம் வாங்கல், குப்புச்சிபாளையத்தில் இன்று நடைபெற்ற தி.மு.க, மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில்,
ஒரு கல்லில் இரண்டு மாங்காயை எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி அடித்துள்ளார். மக்கள் சபை கூட்டம், மகளிர் மாநாடு என இரண்டையும் நடத்தியுள்ளார். திமுகவை பொறுத்தவரை வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் ஒனறுதான். 1.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் ஜெயலலிதா வெற்றிபெற்றார். அரசியல் ரீதியாக ஜெயலலிதா எப்போதும் எங்களுக்கு எதிரிதான்.
பல மாவட்டங்களுகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தினாலும், கரூர் கூட்டம் அத்தனையையும் விஞ்சிவிட்டது. அரசியல்வாதி, தொழிலதிபர் என ஆண்கள் இருந்தாலும் அவர்களை உற்சாகப்படுத்துவது பெண்கள்தான். ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண்கள்தான் உள்ளனர். ஜெயலலிதா உயிரிழந்தவுடன் கலைஞர் என்னை அழைத்து மரியாதை செய்துவிட்டு வரக் கூறினார்.
ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை கமிசன் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை அவரது இறப்பு குறித்து ஒரு துளியளவுகூட உண்மை வெளிவரவில்லை. ஓ.பி.எஸ்-க்கு 8 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணை கமிசனில் ஆஜராகவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் விசாரணை நடத்தி ஜெயலலிதா உயிரிழப்பு குற்றவாளியை கண்டுபிடித்து மக்கள் மன்றம் முன்பு நிறுத்தி சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து கூண்டில் ஏற்றுவதுதான் முதல் வேலை.
பல அமைச்சர்கள் மீது ஏற்கெனவே ஊழல் புகார் பார்ட்-1 கொடுத்துள்ளோம். அடுத்த பார்ட்-2-வில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது விரைவில் ஊழல் புகார் கொடுப்போம். ஒரு அமைச்சர் குட்கா விஜயபாஸ்கர். இன்னொருவர் எப்.சி.விஜயபாஸ்கர். ஜெயலலிதா இருமுறை பதவியில் இருந்து இறங்கியபோது, ஓ.பி.எஸ் முதல்வரானார். ஜெயலலிதா இறந்த பிறகும் ஓ.பி.எஸ் முதல்வரானார். ஆனால் சட்டப்பேரவையில் என்னைப் பார்த்து சிரித்ததால் ஓ.பி.எஸ் பதவியிழந்தார்.
எடப்பாடி பழனிசாமி தேர்தலில் ஜெயிக்காவிட்டால் அனைவரும் ஜெயிலுக்குப் போக நேரிடும் என கட்சியினரிடம் பேசுகிறார். நாங்கள் தேர்தலில் தோற்றவுடன் ஜெயிலுக்கா போனாம். தேர்தலில் தோற்று அதிமுகவினர் விரைவில் சிறைக்குப் போக உள்ளார்கள். மக்கள் ஆதரவுடன் நாங்கள் ஆட்சிக்கு வர உள்ளோம் என்றார்.