ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதும் அதன்பிறகு ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் குமரி மாவட்டத்தில் உள்ள தி.மு.க காங்கிரஸ் எம்.எல்.ஏ க்களை எந்த அரசு நிகழ்ச்சிகளுக்கும் மாவட்ட நிர்வாகமும் அதிகாரிகளும் அழைப்பதில்லை. மேலும் அந்த எம்.எல்.ஏ க்களின் சொந்த தொகுதியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் கூட அழைப்பதில்லை. மேலும் அழைப்பு இல்லாத போதும் எம்.எல்.ஏ க்கள் அதில் கலந்து கொண்டால் அவா்களுக்கு அதிகாரிகள் மரியாதையோ முக்கியத்துவமோ கொடுப்பதில்லை.
மேலும் தொகுதி பிரச்சினைகள் குறித்து ஆட்சியரிடமோ அதிகாரிகளிடமோ அந்த எம்.எல்.ஏ க்கள் பேசினால் கூட நவடிக்கை எடுப்பதில்லை. இது சம்மந்தமாக தி.மு.க காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் கலெக்டா் அலுவலகத்தில் உண்ணாவிரதம் கூட இருந்தனா்.
இந்த நிலையில் இன்று நாகா்கோவில் வடசேரியில் கலெக்டா் பிரசாந்த் வடநேரா தலைமையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள முதல் முறையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தொகுதி எம்.எல்.ஏ தி.மு.க சுரேஷ்ராஜனுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் சுரேஷ்ராஜன் கலந்து கொள்ள கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டது. உடனே கலெக்டரும் தளவாய்சுந்தரமும் சுரேஷ்ராஜன் வரும் வரை காத்திருந்து அதன்பிறகு நிகழ்ச்சியை தொடங்கினார்கள்.
இது சுரேஷ்ராஜன் மற்றும் தி.மு.க. வினருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.