Skip to main content

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது

Published on 18/06/2023 | Edited on 18/06/2023

 

nn

 

அண்மையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடையில் குஷ்பு குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, ''நான்கு ஆண்கள் அமர்ந்து கொண்டு பெண்கள் முன்னாடி வந்து விடக்கூடாது; எதிராக பேசக்கூடாது என்று பார்க்கிறார்கள். இன்று முதல்வர் பார்த்துவிட்டு எச்சரிக்கை கொடுக்கவில்லை என்றால் பாருங்கள் நாளைக்கு என் வீட்டில் 10 பேர் கல் தூக்கி வீசினாலும் எனக்கு தெரியும். அதைப்பற்றி எனக்கு கவலை கிடையாது. திமுகவினர் என் வீட்டில் கல் வீசியதை நான் ஏற்கனவே அனுபவப்பட்டிருக்கிறேன். எனக்கு அது பெரிய விஷயமே கிடையாது. அதை எப்படி சந்திக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்.

 

நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம். உங்களுக்கு பிரச்சனை என்றால் நாங்கள் இருக்கிறோம். அடிக்கிற தைரியம் எனக்கு இருக்கிறது. சண்டை போடுகிற தைரியம் எனக்கு இருக்கிறது. யாரை நம்பியும் நான் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. என்னுடைய திறமையை மட்டும் நம்பி வந்திருக்கிறேன். என்னை சீண்டி பார்க்க வேண்டாம். இதற்கு அப்புறம் எந்த இடத்தில் இருக்கும் பெண்ணையும் இழிவாக பேசினீர்கள் என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன்'' என ஆவேசமாக பேசியிருந்தார்.

 

Shivaji Krishnamurthy arrested

 

தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், 'கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சியின் தலைமைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டது நிலையில் அண்மையில் கட்சியில் சேர்க்கப்பட்டிருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முதல்வரின் நடவடிக்கைக்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர். மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என செய்தியாளர் சந்திப்பில் குஷ்பு கூறியிருந்த நிலையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்