
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில், ஓம் பகதூர் என்ற பாதுகாவலர் கொலை செய்யப்பட்டு, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக நீலகிரி மாவட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. அதேபோன்று இந்த வழக்கு சம்பந்தமாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, சாட்சிகளிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகிறார்கள். அதேபோல் குற்றம்சாட்டப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த வழக்கில் 8வது நபராகச் சேர்க்கப்பட்டுள்ள சந்தோஷ் சாமி, 9வது நபராகச் சேர்க்கப்பட்டுள்ள மனோஜ் என்கிற சாமி ஆகியோர் நேற்று (22.09.2021) உதகை பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். இவர்கள் இருவரும் கோவில் பூசாரிகள் என்ற நிலையில், கொடநாடு கொள்ளை சம்பவத்தை நிகழ்த்த சில தடைகள் இருப்பதாகவும், அதற்கு சில பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது. சொன்னபடியே சில பூஜைகள் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் கொள்ளை வழக்கில் வாகனங்கள் மற்றும் ஆட்களை ஏற்பாடு செய்தது, அதேபோல் கொள்ளை சம்பவம் நடைபெற்ற 2017 ஏப்ரல் மாதம் 23ஆம் தேதிக்கு ஒருநாள் முன்பு இருவரும் கோவை வந்துள்ளனர். கொடநாடு கொள்ளை வழக்கில் கொடநாடு எஸ்டேட்டின் 8வது எண் நுழைவு கேட்டில் இருந்த காவலாளி கிருஷ்ணதபாவை கட்டிப்போட்டுக் கண்காணித்த 4 பேரில் இவர்கள் இருவரும் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் இருவரிடமும் நேற்று சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் இன்றும் மனோஜ் (எ) சாமி, சந்தோஷ் சாமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். அதேபோல், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள சதீஷ் மற்றும் 6வது இடத்தில் உள்ள பிஜின்குட்டி ஆகியோர் விசாரணைக்காக இன்று ஆஜராகியுள்ளனர். மனோஜ் (எ) சாமி, சந்தோஷ் சாமி, சதீஷ், பிஜின்குட்டி ஆகியோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் இந்த விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்தக் கொலை, கொள்ளை வழக்கில் மேலும் யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்த விசாரணையை தனிப்படை அதிரடியாக கையிலெடுத்துள்ளது.