தமிழகத்தில் நிலுவையில் உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி மற்றும் தமிழகம் முழுவதுமான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ள மாநில தேர்தல் ஆணையம், அதற்கான பணிகளில் வேகம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட காவல்துறை இன்ஸ்பெக்டர்களை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது திமுக அரசு. முதல் கட்டமாக மாநகராட்சிகளில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்ற முடிவு செய்யப்பட்டு, அதன்படி சென்னை பெருநகர மாநகராட்சி எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் சட்டம் ஒழுங்கு மற்றும் க்ரைம் உள்ளிட்ட 179 இன்ஸ்பெக்டர்களை ஒரே சமயத்தில் கொத்தாக மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை சமீபத்தில் பிறப்பித்துள்ளார் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால். சென்னையில் உள்ளாட்சித்துறையின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியால் நியமிக்கப்பட்ட காவல்துறை கட்டமைப்புதான் இருந்தது. அத்தகைய கட்டமைப்பை வைத்துக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது என்பதை உணர்ந்தே இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
சென்னையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்துறை இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்படவிருக்கிறார்கள். இதற்கான உத்தரவு மாவட்ட எஸ்.பி.களுக்குப் பறந்துள்ளன. இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் இனி தொடர்ச்சியாக வெளிவரவிருக்கிறது. இந்த நிலையில், மாவட்ட அமைச்சர்கள், திமுகவின் மா.செ.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு தோதான இடமாற்றங்களும் இதில் அடங்கும் என்கிறது காவல்துறை தரப்பு.