'நீட்டை ரத்து செய்வோம் எனக்கூறி மாணவர்களுக்கு அழுத்தம் தருவது திமுகதான்' என தேமுதிகவின் விஜய பிரபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் பேசுகையில், ''விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று பின்னடைவு தான் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் நன்றாகத்தான் இருக்கிறார். அவர் இப்பொழுது இருக்கக்கூடிய நடைமுறைக்கு நன்றாகவே இருக்கிறார். நூறு வயசு வரைக்கும் நல்லா இருப்பார். ஆனால் பழையபடி அவர் வர முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் நாங்களும் நம்புகிறோம். இப்போதைக்கு விஜயகாந்த் நன்றாகத்தான் இருக்கிறார்.
ரசிகர் மன்ற காலத்திலிருந்து அப்பாவின் நிழலாக இருந்து அம்மா ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். நானும் சின்ன வயசுல இருந்தே எப்படி எல்லாம் எங்க அப்பா மக்களுக்கு உதவி செய்கிறார். கட்சியில் எப்படி கஷ்டப்பட்டார் என்பதை பார்த்து நானும் என் கனவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு தொண்டர்கள் கூப்பிட்ட குரலுக்காக ஓடோடி வந்து துணை நின்று வேலை பார்த்து வருகிறேன்.
அதிமுகவிற்கு மாநாடு ஒன்றும் புதிதல்ல, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதேபோன்ற கூத்து தான் இப்பொழுது நடந்துள்ளது. அவர்கள் கட்சிக்குள்ளேயே நிறைய குழப்பம் இருப்பதால். நீ பெருசா; நான் பெருசா என்று போட்டி போட்டுக் கொண்டு செய்கின்ற விஷயமாகத்தான் அதிமுக மாநாட்டை பார்க்கிறேன்.
நீட் தேர்வு என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் நீட் தேர்வு இருக்கிறது. எந்த அரசியல்வாதியும் அரசியல் செய்யாமல் சரியான விஷயங்களை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படி சொன்னால் அதற்கான பலன் கிடைக்கும். நம்மைவிட பின்தங்கிய பல மாநிலங்கள் இருக்கிறது .அங்கே எல்லாம் கூட இதுபோன்ற உயிரிழப்புகள் கம்மியாக இருக்கிறது. ஆனால் திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்து நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறுவதால் மாணவர்கள் மீது அழுத்தம் போகிறது. என்ன நிலைப்பாடு அதைச் சரியாக சொல்லி விட்டால் இந்த பிரச்சனை இருக்காது'' என்றார்.