திமுகவின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் ஆரணி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம். இவரது மகனுக்கு 2016- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக தலைமை சீட் வழங்கியிருந்தது. தேர்தலில் செலவு செய்ய பணமில்லையென கரூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம், காசோலைகள், சொத்து பத்திரங்கள் போன்றவற்றை தந்து 5 கோடிக்கு மேல் கடன் வாங்கியிருந்தார்.
![DMK PARTY ARANI EX MLA ARRESTED POLICE](http://image.nakkheeran.in/cdn/farfuture/msOCp0SwoOalmmAKUah81rMuCD_fBJ-CUvibXY-Gq-4/1580970635/sites/default/files/inline-images/ARANI7.jpg)
அந்த தொகைக்கு சில மாதங்கள் வட்டி செலுத்தி வந்துள்ளார். அதன்பின் வட்டி வழங்கவில்லையாம். இதனால் அந்த தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கடனை திருப்பி கேட்டுள்ளனர். இவர் இதோ, அதோ என இழுத்தடித்துள்ளார். அசல் மற்றும் வட்டி என தொகை 8 கோடியாக அது உயர்ந்துள்ளது. இதனால் பணம் தந்த கரூரை சேர்ந்த முக்கிய பிரமுகர் தன் சார்பாக திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் பிப்ரவரி 6- ஆம் தேதி விடியற்காலை 01.30 மணியளவில் அவரது வீட்டுக்கு சென்று அழைத்து வந்து திருவண்ணாமலையில் வைத்து விசாரித்து வருகின்றனர்.