ராமநாதபுரத்தில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'ஜனநாயக நாட்டில் கட்சி ஆரம்பிப்பதும் மாநாடு நடத்துவதும் தேர்தல்களை சந்திப்பதும் எல்லோருக்கும் உள்ள ஒரு வாய்ப்பு. அதனால் விஜய் கட்சி தொடங்கி மாநாடு நடத்தி இருக்கிறார். அது குறித்து நாம் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. இன்னொரு கட்சியினுடைய கொள்கைகளை பற்றி நாம் விமர்சனம் செய்வது நன்றாக இருக்காது. அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைப்பாரா என்பதைப் பற்றி எல்லாம் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்.
திமுக தன் மீது நம்பிக்கை இல்லாமல் எங்களுடைய கூட்டணி பலமாக இருக்கிறது பலமாக இருக்கிறது என்று சொல்லி அவர்களுடைய எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். இந்தியாவில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லாரும் ஒன்றாக இருக்கிறார்கள். அதுபோல அரசியல் கட்சிகள் எல்லா மதங்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் என தங்களை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே திமுக போன்ற கட்சிகள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இந்துக்களுக்கு எதிராக பேசுவது தொடர்கிறது. அவர் ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை என இங்கு வந்தபோது அவரிடமே கேட்டிருக்கலாமே? மதச்சார்பின்மை என்பது எல்லா மதத்திற்கும் பொதுவாக இருப்பது தான். ஒரு மதத்திற்கு ஆதரவு செய்ய வேண்டும் இன்னொரு மதத்திற்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. எப்பொழுதுமே ஓட்டுகளை வாங்கி ஜெயிக்க வேண்டும் என்று மனப்பான்மையில் தான் இருப்பார்களே தவிர திமுக யாருக்கும் பொதுவானவர்கள் அல்ல''என்றார்.
Published on 30/10/2024 | Edited on 30/10/2024