நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, அங்குள்ள பசுவந்தனை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''பெரும்பான்மையான இந்து மக்களை ஏமாற்றி நாங்கள் தான் உங்களுக்கு எல்லா உதவியும் செய்வோம் என்று சொல்கிறார்களே தவிர, அந்த மக்களுக்கு வேலை கூட கிடைப்பதில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி மோடி ஆட்சிக்கு வந்தார். போய் கேட்டால் பக்கோடா போடுங்க அதுவும் வேலை தான் என்கிறார். இப்படிப்பட்ட ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். எல்லா மக்களையும் அரவணைத்து நடக்கக்கூடிய ஆட்சி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. அதே போன்ற ஒரு ஆட்சியை ஒன்றியத்தில் உருவாக வேண்டும்.
இந்தியா கூட்டணி ஆட்சி என்ற ஒன்றுதான் இந்த நாட்டின் மக்களை பாதுகாக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பாதுகாக்கக் கூடிய ஆட்சியை நாம் அங்கே உருவாக்க வேண்டும். நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் வந்தவுடன் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய். அதேபோல பெட்ரோல் 75 ரூபாய்க்கு வழங்கப்படும். அதேபோல் டீசல் 65 ரூபாய்க்கு வழங்கப்படும். விவசாயக் கடன்,கல்விக் கடன் ரத்து செய்யப்படும். டோல்கேட் எல்லாம் அகற்றப்படும். இதெல்லாம் நம்முடைய முதலமைச்சர் தந்திருக்கும் வாக்குறுதி. இவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ஓட்டு போட வேண்டும். வெயிலாக இருக்கிறது என வீட்டில் உட்கார்ந்து இருக்கக் கூடாது. நம்முடைய ஜனநாயக கடமையாக ஓட்டு போட வேண்டும். அதேபோல் தூத்துக்குடியில் உங்களுக்காக மீண்டும் பணியாற்றக்கூடிய வாய்ப்பை எனக்கு நீங்கள் அளிக்க வேண்டும்''என்றார்.