திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடகாடு ஊராட்சியில் சிறுவாட்டுக்காடு கிராமம் என்பது மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய பகுதியாகும்.
இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதல் இக்கிராமத்தில் மின்சார வசதி இல்லாமல் இருளில் மூழ்கியிருந்தது. திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி முயற்சி எடுத்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அந்த மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு சோலார் விளக்குகளும், சோலார் தெருவிளக்குகளும் அமைத்துக்கொடுத்தார்.
அதன்பின் சிறுவாட்டுக்காடு மலைவாழ் மக்கள் பயன்பாட்டிற்காக சமுதாயக்கூடம் கட்டுவதற்கு மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 இலட்சம் நிதியை பெற்று தற்போது நடைபெற்றுவரும் சமுதாயக்கூடம் கட்டும் பணியை சக்கரபாணி, ஆய்வு செய்தார். இந்த மலைவாழ் மக்கள் வாழும் வடகாடு ஊராட்சி, சிறுவாட்டுக்காடு கிராமத்திற்கு மின்சார வசதியை ஏற்படுத்தித்தர வேண்டுமென்று தமிழக சட்டமன்ற பேரவைக் கூட்டத்தொடர்களில் தொகுதி எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்து வலியுறுத்தியதின் பேரிலும், இந்திய ஆட்சிப்பணி விக்ரம் கபூரை நேரில் சந்தித்து வலியுறுத்தியதின் பேரிலும் சிறுவாட்டுக்காடு கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்க மாநில மின்சார சமச்சீர் நிதியிலிருந்து ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனுமதி வழங்கப்பட்டு பூமி பூஜையை தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணியும் பணியை தொடங்கி வைத்தார்.
ஆனால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டதின் காரணமாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்துபேசி இப்பணியை விரைந்துமுடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதன் பேரில் முழுவீச்சில் மின் இணைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் இப்பணி முடிந்து பொது மக்களின் பயன்பாட்டிற்கும் வர உள்ளது.
நடைபெற்று வரும் இப்பணிகளைதான் மேற்கு மாவட்ட செயலாளரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மலைவாழ் மக்கள் இருளில் சூழ்ந்து இருந்தவர்களுக்கு மின் இணைப்பு பெற்றுத்தந்ததற்காக சக்கரபாணியை ஆரவாரத்துடன் இருகரம் கூப்பி உற்சாகமாக வரவேற்று நன்றியை தெரிவித்தனர்.
இதில் மாவட்ட கவுன்சிலர் சங்கீதா பழனிசாமி. ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி, ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராமராஜ், ம.தி.மு.க தமிழ்வேந்தன், ஊராட்சி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.