திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக சி.என்.அண்ணாதுரை என்பவர் போட்டியிடுகிறார். இன்று மார்ச் 22ந்தேதி மதியம் 12.30 மணிக்கு திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும். மாவட்ட ஆட்சித்தலைவருமான கந்தசாமியிடம், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் அண்ணாதுரை.
வேட்புமனு தாக்கல் செய்தபின் வெளியே வந்து பேட்டியளித்த திருவண்ணாமலை தெற்கு மா.செவும், எம்.எல்.ஏவுமான எ.வ.வேலு, விவசாய குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர் எங்கள் வேட்பாளர். விவசாயிகளின் பிரச்சனையை நன்கறித்த அவர், வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கு தேவையானவற்றை செய்து தருவார்.
எங்கள் வேட்பாளரை மக்கள் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைப்பார்கள். இதனை இவ்வளவு ஆணித்தரமாக நாங்கள் சொல்லக்காரணம், போகும்மிடங்களில்லொம் மக்கள் ஆரவரமாக வந்து எங்கள் வேட்பாளரை வரவேற்கிறார்கள். மத்தியில் ஆளும் மோடி அரசையும், மாநிலத்தில் ஆளும் எடப்பாடி அரசையும் மக்கள் விரட்ட வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள். அந்த அளவுக்கு இந்த ஆட்சிகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.
வேட்புமனுதாக்கல் செய்ய கூட்டணி கட்சியினர், சொந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பந்தாவாக சென்றாலும் வேட்புமனு தாக்கல் செய்த அறைக்குள் 5 பேரை தவிர வேறு யாரையும் தேர்தல் விதிப்படி அனுமதிக்கவில்லை. அந்த 5 பேரும் திமுக நிர்வாகிகளாகவே இருந்தது கூட்டணி கட்சியினரை கவலையடைய செய்தது.