தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகனின் உடல்நிலை குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
தி.மு.க.-வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களைத் தொடர்ந்து வழங்கி வந்தார். இதனையடுத்து, ஜூன் 3- ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்தநாளையொட்டி செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகளுக்காக மாவட்ட நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த 2- ஆம் தேதியன்று மூச்சுத்திணறலுடன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜெ.அன்பழகனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
61 வயதான அன்பழகன், கடந்த 2- ஆம் தேதியன்று கரோனா மற்றும் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் கருவி மூலம் 80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் நேற்று (04/06/2020) வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் மூலம் 80% ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில், 67% மட்டுமே இன்று தேவைப்படுகிறது என ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனை மருத்துவர் ரீலாவிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர் பழனிசாமி, அன்பழகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.