கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தல் இதுவரை நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் பேரில் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில், அ.ம.மு.க., தே.மு.தி.க. கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தி.மு.க.வைச் சேர்ந்த தங்கவேலு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஓ.பி.எஸ்-ன் சொந்த ஊரான பெரியகுளத்தில், 2019ஆம் ஆண்டு நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 16 ஒன்றிய கவுன்சிலர்களுக்கான தேர்தலில், 8 திமுக ஒன்றிய கவுன்சிலர்களும், 6 அதிமுக ஒன்றிய கவுன்சிலர்களும் வென்றனர். மேலும், அ.ம.மு.க. ஒரு இடத்தையும், தே.மு.தி.க. ஒரு இடத்தையும் பிடித்தது.
இந்நிலையில், அ.ம.மு.க ஆதரவில், தி.மு.க. ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவியைக் கைப்பற்றியது. ஆகமொத்தம் 9 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றிய நிலையில், ஜெயமங்களம் 8-வது வார்டு தி.மு.க. ஒன்றியக் கவுன்சிலரான செல்வம் அ.தி.மு.க.வில் இணைந்தார். இதனால், தி.மு.க.வின் எண்ணிக்கை 7ஆகக் குறைந்தது.
ஒன்றிய கவுன்சிலர் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல், கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி நடைபெற்றபோது திமுக உறுப்பினர் 7 பேர் மற்றும் அமமுக உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 8 நபர்களும் தேர்தலுக்கு வந்தனர். இந்நிலையில், அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 8 உறுப்பினர்கள் வராததால், அன்று தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோன்று தொடர்ந்து இரண்டுமுறை நடைபெற்ற தேர்தலையும் அதிமுக புறக்கணித்தது. மூன்றாவது முறையாகவும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்திமுடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதனடிப்படையில் இன்று தேர்தல் நடைபெற்றது.
ஒன்றியத் தலைவருக்கான தேர்தலில் அ.ம.மு.க., தே.மு.தி.க. ஆகிய இரு உறுப்பினர்களின் ஆதரவுடன் தி.மு.க. 9 எண்ணிக்கையைப் பெற்று தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த தங்கவேல் என்பவர் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஓராண்டாக, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்பேரில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் தேர்தலில் அ.ம.மு.க., தி.மு.க.விற்கு ஆதரவு கொடுத்ததால், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் தேர்தலில் அ.ம.மு.க. உறுப்பினர் மருதையம்மாள் தி.மு.க. ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கவுன்சிலர் வெற்றிபெற்றது அக்கட்சியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், அதிமுக கவுன்சிலர்கள் வெற்றி பெறாததை அமமுகவினர் கொண்டாடினர்.