விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல் நிலைய பகுதியில் உள்ள கோட்டக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார்(55), அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் திமுக இளைஞரணியில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். தற்போது திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவரது மனைவி சரஸ்வதி உள்ளாட்சித் தேர்தலில் வென்று ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார்.
ஜெயக்குமார், அவர் வீட்டுக்கு அருகில் உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு பகுதியில் உள்ள டீக்கடைக்கு தினசரி காலையில் டீ குடிக்க செல்வது வழக்கம். அதேபோல் நேற்றும் தனது வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிக்கு டீ குடிக்க சென்றுள்ளார். டீக்கடையில் இருந்து காலை 6:30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் தனது வீடு நோக்கி வந்து கொண்டிருந்தபோது, இரும்பை சிவன் கோவில் அருகில் ஜெயக்குமாரை வழிமறித்த ஒரு மர்ம கும்பல் சரமாரியாக அவரை வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமார், அலறி சத்தம் போட்டுள்ளார். அவர் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து, ஜெயக்குமாரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி (பொறுப்பு) அபிஷே குப்தா, ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் கடந்த ஆண்டு அவரது ஊரில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதில் ஜெயக்குமார் தலையிட்டு பேசி தீர்த்து வைத்துள்ளார். இதில் ஒரு தரப்பினர் ஜெயக்குமாரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரது மகன் மனோஜ்(20), அவரது தாய் சரஸ்வதி(38), சரஸ்வதியின் சகோதரி சாந்தி(40) ஆகியோரை கைது செய்துள்ளனர். கைதான அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன், சந்துரு ஆகிய இருவரையும் தேடி வருவதாக போலீசார் கூறுகின்றனர். படுகொலை செய்யப்பட்ட திமுக நிர்வாகி ஜெயக்குமார் உடலுக்கு அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் உட்பட ஏராளமான திமுகவினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.