தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான எ.வ.வேலுவின் வீடு, கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்கள் என சுமார் 10- க்கும் மேற்பட்ட இடங்களில் 100- க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள், கடந்த மார்ச் 25, 26 -ஆம் தேதிகளில் சோதனை செய்தனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்திலேயே இந்தச் சோதனை நடைபெற்றது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு பிரச்சாரம் முடித்துவிட்டு வந்த தி.மு.க. தலைவரின் வாகனத்திலும் சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சோதனையை மார்ச் 26- ஆம் தேதி மாலை 05.00 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நிறைவுசெய்தனர்.
சோதனை குறித்து வருமானவரித்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் தெரிவிக்காத நிலையில், தி.மு.க. மாவட்டச் செயலாளரும், வேட்பாளருமான எ.வ.வேலு மற்றும் தி.மு.க. சட்டத்துறையின் ஆலோசகர், மூத்த வழக்கறிஞர் விடுதலை ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது எ.வ.வேலு கூறியதாவது, "திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் உதயசூரியன் போட்டியிடுகிறது. நான் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுகிறேன். அதோடு வடமாவட்டங்களில் உள்ள வேறு சில தொகுதிகளுக்கும் பிரச்சாரத்துக்குச் செல்கிறேன். என்னை முடக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ரெய்டுக்கு டெல்லி உத்தரவிட்டுள்ளது. இங்கு என்னை எதிர்த்துப் போட்டியிடுபவர் பா.ஜ.க. வேட்பாளர். அவரை வெற்றிபெற வைப்பதற்காகவும் டெல்லி இப்படியொரு ரெய்டை நடத்தியுள்ளது. எங்கள் குடும்பம் அறக்கட்டளை வைத்துள்ளது, கல்விச் சேவை செய்கிறது. அதுகுறித்து கேள்வி எழுப்பாமல் தேவையற்ற கேள்விகளை எழுப்பினார்கள். ஓட்டுக்கு எவ்வளவு தரப்போகிறீர்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள்.
வருமான வரித்துறை என்பது அம்பு தான், அதை ஏவியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். இந்த திருவண்ணாமலை மண் திராவிட மண், இது ஆன்மிகமும், திராவிடமும் இணைந்தது. அதனால் தான் அண்ணாமலையார் கோயிலை தி.மு.க. தலைவர் மீட்டார், பா.ஜ.க. அதனை முடக்க திட்டமிட்டது. இந்தச் சோதனை மூலம் என்னை இரண்டு நாள் முடக்கிவிட்டார்கள். இந்த இரண்டு நாளை ஈடுகட்டும் விதமாக இரவு, பகல் ஓய்வு இல்லாமல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு 8 தொகுதிகளிலும் உதயசூரியன் வெற்றிபெற உழைப்பேன்" என்றார்.
அதன் பின்னர் மூத்த வழக்கறிஞர் விடுதலை கூறியதாவது, "தேர்தல் காலகட்டத்தில் இதுபோன்ற ரெய்டுகள் நடத்துவது சட்ட விரோதமானது. மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க.வை சேர்ந்தவர் தான் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவருக்குச் சாதகமாகச் செயல்படவே மத்திய அரசு, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருமான வரித்துறையை ஏவியுள்ளது.
வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ரெய்டு செய்வதற்குப் வெவ்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். ஆடியோவில் ஒருவர் பேசினார், அதனை அடிப்படையாகக் கொண்டு சோதனைக்கு வந்தோம் என்றார்கள். அது நடந்தது பிப்ரவரி 2- ஆம் தேதி. அன்று முதல் இன்று வரை என்ன செய்துகொண்டு இருந்தார்கள். அல்லது தேர்தல் முடிந்த பிறகு நடத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் இப்படிச் செய்வது சட்ட விதிகளுக்கு முரணானது என ஆடியோ குறித்துக் கேள்வி எழுப்பியதும், எங்களுக்குப் பணம் இருப்பதாக தகவல் வந்தது எனக் குறிப்பிட்டார்கள். ஆனால், அதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை.
ஆக மத்தியில், ஆளும் அரசு தங்களது அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்தியுள்ளது. பணம் கைப்பற்றப்பட்டதாக தவறான தகவலைப் பரப்பினார்கள். இது அவரின் பெயரைத் தவறாகப் பரப்பவே செய்துள்ளனர். இதனால்தான், இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் தெரிவித்துள்ளோம். வாக்கு எண்ணிக்கை முடிவுக்குப் பிறகு இதுகுறித்து நீதிமன்றம் நாடுவதா அல்லது கைவிடுவதா என்பதைப் பின்னர் ஆலோசித்து முடிவுசெய்வோம்" எனத் தெரிவித்தார்.