சேலம் அருகே, தி.மு.க. பிரமுகரைத் தீர்த்துக்கட்டியது குறித்து கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள கன்னியாம்பட்டியைச் சேர்ந்தவர் கந்தன் (வயது 62). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தி.மு.க.வில் மாவட்டப் பிரதிநிதியாக இருந்தார். ஏப். 28- ஆம் தேதி காலை, அவர் கன்னியாம்பட்டியில் வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவருடைய உறவினர் மகன் மணிகண்டன் (வயது 35), சித்தப்பா சின்னபையன் (வயது 50) ஆகிய இருவரும் அங்கு வந்தனர்.
திடீரென்று அவர்கள் கந்தனை கீழே தள்ளிவிட்டனர். அவர் நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக கந்தனை வெட்டினர். இதில் அவருடைய முகம், கழுத், மார்பு பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கந்தன் உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் இடைப்பாடி, கொங்கணாபுரம் சுற்று வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கொங்கணாபுரம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், மணிகண்டன், சின்னபையன், இவருடைய மகன் சேட்டு ஆகியோர் சேலம் அஸ்தம்பட்டியில் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு வர உள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் (ஏப். 29) காலையில் அஸ்தம்பட்டி நீதிமன்ற சாலையில் கண்காணிப்பில் இருந்த காவல்துறையினர், அங்கு வந்த மூவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். கொலையுண்ட கந்தனுக்கும், கொலையாளிகளுக்கும் தோட்டத்திற்குச் செல்லும் வழித்தட பிரச்னை தொடர்பாகவும், உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட தகராறால் முன்விரோதமும் இருந்து வந்துள்ளது.
வழித்தட பிரச்னையை காரணம் காட்டி, தோட்டத்திற்குள் நுழைய முடியாதபடி கொலையாளிகளுக்கு கந்தன் முட்டுக்கட்டையாக இருந்துள்ளார். அவர் உயிருடன் இருந்தால் தொல்லைக் கொடுத்துக் கொண்டே இருப்பார் எனக்கருதி, கந்தனை அவர்கள் தீர்த்துக் கட்டியிருப்பது தெரிய வந்தது. இந்தக் கொலைக்கு சின்னபையனின் மகன் சேட்டுவும் உடந்தையாக இருந்துள்ளார்.
கைதான மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.