திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுப்பாளையம் ஒன்றியத்தில் மொத்தம் 15 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் ஜனவரி 11ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் அலுவலர் முன்பு ஜனவரி 11ந்தேதி காலை ஒன்றிய குழு தலைவர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக சார்பில் சுந்தரபாண்டியன் என்பவரும், அதிமுக சார்பில் ரமேஷ் என்பவரும் போட்டியிட்டனர்.
இதில் சுந்தரபாண்டியன் 10 கவுன்சிலர்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார். ரமேஷ் தோல்வியை சந்தித்தார். தேர்தல் நடைபெற்றது தொடர்பாக ஒன்றிய குழு தீர்மான புத்தகத்தில் தீர்மானம் இயற்றி தேர்தல் அலுவலர் கையெழுத்திட்டார். தேர்தலில் வாக்களித்த 15 கவுன்சிலர்களும் கையெழுத்திட்டனர், தோல்வியை சந்தித்த அதிமுக வேட்பாளர் ரமேஷ் மற்றும் அக்கட்சி கவுன்சிலர்களும் கையெழுத்திட்டு முடித்தனர்.
இதுப்பற்றி திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரும், புதுப்பாளையம் சேர்மன் சுந்தரபாண்டியன் என செய்தியாளர்களுக்கு தகவல் அனுப்பினார். இந்நிலையில் திடீரென புதுப்பாளையம் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தரப்பில் இருந்து மாலை தகவல் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதுப்பற்றி புதுப்பாளையம் திமுக தரப்பு கவுன்சிலர்கள், கட்சி வழக்கறிஞர்கள் பழனி, புகழேந்தி, மனோகரனுடன் சென்று ஆவணங்களை காட்டி முறையிட்டனர். விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன் எனச்சொல்லியுள்ளார்.
இதுப்பற்றி திமுக மா.செவான முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் தேர்தல் முறையாக நடைபெற்று மினிட் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அதன் நகல். இந்நிலையில், ஆளும்கட்சியான அதிமுக தரப்பில் இருந்து தேர்தல் நடத்திய அலுவலரிடம், புதுப்பாளையம் தேர்தல் முறைகேடு எனச்சொல்லி ரத்து செய்ய வேண்டும்மென மிரட்டியுள்ளனர். அதனை அவர் ஏற்க மறுத்துள்ளார், அவரை மிரட்டி தலைவர் யார் என்பதை அறிவிக்காமலும், சான்றிதழ் வழங்காமல் நிறுத்தியுள்ளனர் அதிகாரிகள்.
இதுப்பற்றி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கந்தசாமியிடம் எங்கள் கட்சி வழக்கறிஞர்கள், 10 கவுன்சிலர்களுடன் சென்று நியாயத்தை கேட்டுள்ளனர். அவர் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன் எனச்சொல்லியுள்ளார். இதுதொடர்பாக எங்கள் கட்சியின் மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி, மாநில தேர்தல் அலுவலரை சந்தித்து முறையிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரிய அளவில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதனை பொருத்துக்கொள்ள முடியாமல் ஆளும்கட்சியினர் அராஜகத்தில் ஈடுப்பட்டு கவுன்சிலர்கள் நியாயமான முறையில் வாக்களித்து வெற்றி பெறவைத்த திமுக சேர்மனை அறிவிக்காமல் செய்துள்ளார்கள். இது நியாயமா என மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
திமுக சார்பில் சேர்மன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சுந்தரபாண்டியன், திமுக மாவட்ட துணை செயலாளராக உள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் கார் கண்ணாடியை இருகட்சி பிரச்சனையில் அடித்து உடைத்து எதிர்ப்புக்காட்டினார் சுந்தரபாண்டியன். இந்த மாவட்டத்தில் தன்னை எதிர்க்க யாரும்மில்லை என ஜம்பமாக வலம் வந்தவரின் கார் கண்ணாடியை அக்ரியன் பலமான கலசப்பாக்கம் தொகுதிக்குள் வைத்து அடித்து உடைத்து பயத்தை காட்டி ஓடவிட்டதால் அன்று முதல் இருவருக்கும் பகை. அக்ரி.கிருஷ்ணமூர்ததியின் மிரட்டலால் தான் 15 கவுன்சிலர்களில் 10 கவுன்சிலர்களின் ஆதரவில் வெற்றி பெற்ற சுந்தரபாண்டியன் வெற்றியை அறிவிக்கவிடாமல் செய்துள்ளார் என்கிறார்கள்.
அதுமட்டும்மல்ல புதுப்பாளையம் ஒன்றியத்தில் வன்னியர், உடையார் செல்வாக்கு அதிகம். அந்த புதுப்பாளையம் ஒன்றியம் தற்போது பொதுப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. அந்தயிடத்தில் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவர் எப்படி ஒன்றிய சேர்மனாகலாம் என்பது அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் கோபம் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.